ஏ.டி.எம் இயந்திரங்களில் திருட்டு! சீன பிரஜைகள் இருவர் விளக்கமறியலில்!!

473

1150

வங்கிகளிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதனமான முறையில் வாடிக்கையாளர்களின் விபரங்களை திருடி வந்த சீனப் பிரஜைகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இருவரையும், கொழும்பு 6 பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.வங்கிகளிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை குறித்த இருவரும் திருடி வந்துள்ளனர்.ஏ.டி.எம் அட்டையை பணத்தினைப் பெற்றுக்கொள்ள இயந்திரத்தில் செலுத்தும் போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டு வந்தன.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 26ம் திகதி வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புறக்கோட்டையில் உள்ள குறித்த வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட இலத்திரனியல் சாதனம் கண்டறியப்பட்டது.

அத்துடன், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்திலும் இவ்வாறு இலத்திரனியல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்த போது, குறித்த சீன பிரஜைகள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளவத்தை பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட உபகரணங்களை கழற்றிச் செல்ல வந்த சீன பிரஜைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களை திருட பயன்படுத்திய இலத்திரனியல் சாதனம் வெளிநாட்டு, உள்நாட்டு நாணயத்தாள்கள் போன்றன கைப்பற்றப்பட்டன.இதேவேளை, சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.