
ஜேர்மனி நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் நிர்வாணமாக நிற்கவைத்துள்ள சம்பவத்திற்கு பெற்றோர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியின் Dusseldorf நகரில் Europa என்ற பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் பயின்று வந்த 13 வயதான மாணவர்களுக்குதான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இரண்டு மாணவர்கள் நின்றுள்ளதை பார்த்த ஆசிரியர் ஒருவர் இருவரையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரின் முன்னால் நிறுத்தியுள்ளார்.’விளையாட்டு பொருட்கள் உள்ள அறையில் சிலபொருட்கள் காணாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம். உங்களுடைய பைகளை திறந்து காட்டுங்கள்’ என தலைமை ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இருவரும் ‘நாங்கள் எதுவும் திருடவில்லை’ எனக்கூறிக்கொண்டு அவர்களின் பைகளை திறந்துக் காட்டியுள்ளனர்.பைகளில் ஒன்றும் இல்லாததால் திருப்தி அடையாத தலைமை ஆசிரியர்,‘ உங்களுடைய ஆடைகளை நீக்குங்கள். சோதனை செய்ய வேண்டும்’ எனக் கடுமையான குரலில் பேசியுள்ளார்.
வேறு வழியின்றி இரண்டு மாணவர்கள் தங்களுடைய மேலாடைகளை கழட்டிவிட்டு உள்ளாடைகளுடன் நின்றுள்ளனர்.இந்த நிலையிலும் திருப்தி அடையாத அந்த கொடூரமான தலைமை ஆசிரியர் ‘இருவரின் உள்ளாடைகளையும் தூக்கி வீசுங்கள். இல்லையென்றால்,பொலிசாரை கூப்பிடுவேன்’ என அதட்டியுள்ளார்.
‘நான் இப்போது ஒன்று, இரண்டு என எண்ணுவேன். அதற்குள் நீங்கள் உள்ளாடைகளை நீக்கியிருக்கவேண்டும் எனக் கூறிவிட்டு எண்களை எண்ண தொடங்கியுள்ளார்.வேறு வழியில்லாத மாணவர்களும் உள்ளாடைகளையும் கழட்டியுள்ளனர். அப்போது, உள்ளே எந்த விளையாட்டு பொருளும் இல்லாததால் தலைமை ஆசிரியர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவர கொதித்தெழுந்த பெற்றோர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.புகாரை பெற்று பொலிசார் விசாரணையை துவக்கியபோது, விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் எந்த பொருளும் காணாமல் போகவில்லை என தெரியவந்துள்ளது.
அதே சமயம், மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தலைமை ஆசிரியர் நடந்துக்கொள்ளவும் இல்லை என்பதும் அப்பள்ளியின் மாணவர்கள் மூலம் தெரியந்துள்ளது.எனவே, பொருட்களை திருடியதாக சந்தேகப்பட்டு தான் ஆசிரியர் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்திருந்தாலும், அதனை மோசமான வழியில் விசாரணை செய்தது குற்றம் என்பதால் தலைமை ஆசிரியர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





