புளொட் அமைப்பின் மேதின அறைகூவல் -2016!!

595

Sitharthan

உலகளாவிய ரீதியில் மே முதல் நாளை மேதினமாகக் கொண்டாட சர்வதேச தொழிலாளர் சமூகம் ஏகமனதாக முடிவு செய்தது. இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒன்றுகூடல் என்பன பிரதான பங்கினை வகிக்கின்றன.எது எவ்வாறு இருப்பினும் மே தினத்தை தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை வென்றெடுத்த பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றது.

எமது தாயகபூமியில் நாம் நிர்க்கதியான நிலையில் தொடர்ந்தும் அடிமை வாழ்வு வாழ்கின்றோம். எமது இருப்பு இன்று கேள்விக்குறியாகின்றது. அரசியல் கைதிகளின் விடுதலையோ அல்லது எமது மக்களின் நிலங்களோ இன்னும் விடுவிக்கபடாமையே எம்மை தொடர்ந்தும் அடிமை வாழ்வை வாழ தூண்டுதலாய் அமைகிறது.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டில் தலைநிமிர்ந்து வாழ எமது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகிய நாங்கள் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தும் விடயங்களாக,

1- தனியார் ஊழியர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

2- தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான அடிப்படைச் சம்பளம் உறுதிபடுத்தப்படல் வேண்டும்.

3- சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் என்பன எமது பிராந்தியத்தில் முற்றாக களையப்படல் வேண்டும்.

4- வெளிநாட்டு பணிப்பெண்களின் வேலை நிர்ணயம் உறுதிபடுத்தப்படல் வேண்டும்.

5- அரசுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சமூக சீரழிவுகளை மாற்றியமைக்க இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.

6- பட்டதாரிகளின் முறையான வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும்.

7- புலம்பெயர் தமிழர்கள் தாயக பூமியில் முதலீடு செய்வதன் மூலம்
எம்மினம் மாற்றான் கையில் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே தங்கள் முதலீடுகள் மூலம் எமது இனத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துங்கள்.

ஆகவே மே தினத்தை மதித்து அதற்கு உகந்த கெளரவத்தை அளித்திடல் வேண்டும். இதுவே தொழிற்சங்கவாதிகளின் தலையாய வேண்டுகோளாகும். அத்துடன் மே தினக் கொண்டாட்டங்கள் கேளிக்கையாகக் கூடாது. மே தினத்தின் ஆழ்ந்த எண்ணக் கருவினை விளங்கிக் கொள்ளாது அதனை ஒரு வெறும் கேளிக்கையாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பொருளாதாரப் பின்னடைவுகளாலும், மந்த நிலைகளாலும் தொழிலாளர் வர்க்கத்தினரே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தொழில் இழப்பையும், உழைப்பையும் தாங்கி அவர்கள் தமது இருப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மேதினம் உழைக்கும் வர்க்கத்தினரான தொழிலாளரின் இருப்பை மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கும் அறைகூவல் விடுக்கும் ஒரு நாளாகும்.

இனம், மொழி, மதம் என்ற அடிப்படைகளில் தொழிலாளரின் ஐக்கியம் துண்டாடப்படுதலைக் கண்டறிந்து அனைத்துத் தொழிலாளரும் ஒன்றுபட வேண்டும் என புளொட் அமைப்பினராகிய நாங்கள் அறைகூவல் விடுகின்றோம்.

கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ)
தலைவர்,
தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)