
பாகிஸ்தான் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் தன்னை மீண்டும் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அஜ்மல், அவருடைய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களை பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் செய்யும் படி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த உலக கிண்ணத் தொடரில் அஜ்மலின் நடவடிக்கை குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை அணியை விட்டு விலக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பாகிஸ்தானில் நடந்து வரும் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான தொடரில், அஜ்மல் பலூசிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில். நேற்று பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடந்த போட்டியில்அஜ்மல் இடம்பெற்று இருந்த பலூசிஸ்தான் அணியும், இஸ்லாமாபாத் அணியும் மோதின.
இந்த போட்டியின் போது, மைதானத்தில் குழந்தைகள், அஜ்மலை ஊக்குவிக்கும் வகையில் சுலோக அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்துள்ளனர், அந்த அட்டையில் அஜ்மல் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
மேலும், அஜ்மல் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் 50-ற்கும் மேற்பட்ட வீரர்கள் சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை தாங்கியவாறு மைதானத்திற்கு வெளியே சர்ச்சைக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் பிடித்துக்கொண்டிருந்த பதாகைகளில், அஜ்மல் மற்றும் துடுப்பாட்டகாரர் உமர் அக்மல் ஆகியோரை, மீண்டும் பாகிஸ்தான் அணியில் தெரிவு செய்ய வேண்டும் எனவும், அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சைக்குரிய செயலை அஜ்மலின் வற்புறுத்தலினால் தான், அவருடைய அகாடமியை சேர்ந்த வீரர்கள் செய்துள்ளதாக தற்போது ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.





