
அதிக வெப்பத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதுப்புக்கு உள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.தாங்கள் தகரக்கொட்டகைகளில் இருந்து கல்வி பயில்வதாகவும், மற்றும் கல்வி புகட்டும் ஆசிரியர்களும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தில் தற்போது 104 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்தப் பாடசாலைகளில் 32 ஆயிரத்து 245 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அத்துடன் இப்பாடசாலைகளில் 1, 727 ஆசிரியர்களும் கல்வி கற்பித்து வருகின்றனர்.இவர்களுக்கு வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாமையால் தகரக் கொட்டகைகளிலும் மர நிழலிலும் இவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக வினாசியோடை, வேரவில், முக்கொம்பன், கறுக்காய் தீவு, செம்மங்குன்று, ஆனையிறவு, பரந்தன், முரசுமோட்டை,புன்னைநிராவி உள்ளிட்ட பாடசாலைகள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
முற்பகல் பத்து மணிக்கு பின்னர் கல்வி பயில முடியாத அவல நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வறட்சி காரணமாக குடி நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





