
எதிர்வரும் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதியை தற்காலிக அடிப்படையில் நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக லங்கா வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வணிக சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.இந்த நிலைமை வாகன இறக்குமதியை பெரிதும் பாதிக்கின்றது.இதனால் வாகன இறக்குமதியை நிறுத்திக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.தற்போது அமெரிக்க டொலர் மற்றும் ஸ்ரெலிங் பவுண்ட் போன்றவற்றின் இலங்கைப் பெறுமதி உயர்வடைந்துள்ளது.இதனால் வாகன இறக்குமதிக்காக பெருந்தொகையை செலவிட நேரிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வாகனங்களின் விலைகளும் ஒப்பீட்டளவில் உயர்வடையும்.எதிர்காலத்தில் இந்திய வாகனங்களின் விலைகள் மூன்று முதல் நான்கு லட்சத்தினால் உயர்வடையும்,இதனால் இந்த வாகனங்களுக்கான கேள்வி குறைவடையும்.வெற் வரி வாகன விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.ஜப்பானிய யென் பெறுமதி அதிகரித்துள்ளதனால் ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.





