
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மாபியா கும்பலாக செயற்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் தொழில் பெற்று சென்று நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போதே பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக விண்ணபிக்கும் இலங்கையர்களை குறித்த மாபியா கும்பல்கள் அழைத்துச் சென்று இடைநடுவில் விட்டுவிடுவதாகவும், இவர்களின் பாதுகாப்புக்கு மாபியா கும்பல்கள் உத்தரவாதம் வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகவர் மாபியாக்களை நம்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் பல சொல்லெண்ணா துயரங்களை அனுபவிப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரப்பட்டுள்ளது,வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் பணியாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவுரைகளை செவி மடுப்பது இல்லை என்றும் பிரதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.





