2016 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் ஆதரவு யாருக்கு?

595

Vijay

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் ஆதரவு யாருக்கு என்பதை அகில இந்திய இளையதளபதி விஜய் தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.

நடைபெறவிருக்கின்ற 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்வேறு நடிகர், நடிகைகள் தங்கள் அபிமான கட்சிகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவரது விஜய் மக்கள் தலைமை இயக்கத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்தக் கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சயமம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

ஆனால் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைப்பாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன்.

மேலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே இளைய தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.