
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள அவரை அமுலாக்கத் துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையா மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது.
எனவே அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய அரசு கடிதம் எழுதிய பிறகு இது குறித்து கருத்து தெரிவித்த விஜய் மல்லையா, கட்டாய நாடு கடத்தலுக்குள்ளான நான் இந்தியா திரும்ப போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது எனவும், அதேவேளையில், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





