வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் : உள்ளூர் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!!

902

Vavuniya

கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த வவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை முடிவிற்கு வந்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா தாண்டிக்குளத்தில் அமைக்க மாகாணசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இதற்காக உழைத்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் ஊடக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளனர்.

இவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

வட மாகாண விவசாயிகளின் நன்மை கருதி மத்திய கிராமிய பொருளாதார அமைச்சினால் 2000 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையமொன்றினை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவ் அமைச்சு கோரிய காணியை வழங்குவதில் பல்வேறான இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் எமது சங்கம் மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க அமைதியான போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறு மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் சென்று விடுமோ என்று எண்ணி விவசாயிகள் மற்றும் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் செய்வதறியாது இருக்கையில், வட மாகாணசபையில் விசேட பிரேரணை மூலமாக ஏகமனதாக தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் உள்ள மேட்டுக்காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வழங்கலாம் என தீர்மானம் எடுத்துள்ளமை வவுனியா மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றோம்.

எனவே இத்திட்டம் வெற்றியளிக்க உழைத்த மத்திய கிராமிய பொருளாதார அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் அனைவருக்கும் எமது அமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.