காட்டுத்தீயால் தவிக்கும் குடிமக்கள்: நிதியுதவி வாங்க மறுத்த கனேடிய பிரதமர்!!

616

22-justin-trudeau-lede.w529.h352

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயாராக இருந்த உலக நாடுகளின் உதவியை பெறுவதற்கு அந்நாட்டு பிரதமர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரி நகரில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

நகரம் முழுவதும் உள்ள 2,400 கட்டிடங்கள் இந்த தீ விபத்தில் சிக்கி நாசமடைந்துள்ளன. ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ள நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளன.தீவிபத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிர்த்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.கனடாவில் உள்ள செஞ்சிலுவை சங்கம் இதுவரை சுமார் 54 மில்லியன் டொலர் வரை நிதி திரட்டியுள்ளது. இது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மெக்ஸிகோ, தைவான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

ஆனால், உலக நாடுகளின் இந்த உதவி தொடர்பாக நேற்று கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், ‘கனடாவில் நிகழ்ந்த இந்த தீ விபத்திற்கு உதவ கனடா நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் முன் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால், கனடா நாட்டு அரசாங்கமே சீரமைப்பு பணிகளில் திறமையாக செயல்பட்டு வருவதால் இச்சூழலில் வெளிநாடுகளின் உதவிகளை பெறும் அவசியம் ஏற்படவில்லை.எனினும், கனடாவிற்கு உதவ முன்வந்த அனைத்து நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தற்போது காட்டுத்தீ ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், ஃபோர்ட் மெக்முர்ரி பகுதியை பார்வையிட பிரதமர் தயாராகும் நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.ஆபத்தான சூழலில் உதவ தயாராக இருக்கும் உலக நாடுகளின் கரங்களை பிரதமர் உதறி தள்ளியுள்ளது கவலையை தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கனடா நாட்டு குடிமக்களும் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.