இளம்பெண்கள், இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில் கலந்து இருக்கின்றன.
இதனால் உடனடியாக பலன் போன்ற தோற்றம் தோன்றினாலும் பிற்காலத்தில் தோல் நோய்களையும் தோல் சுருக்கத்தையும் தந்து விடுகின்றன.
இதை தவிர்க்க இயற்கை மருத்துவத்தில் மிக எளிமையான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து முல்தானி மிட்டி ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை அரை மணி நேரம் காயவிட்டு பின்னர் விரல்களை ஈரப்படுத்தி லேசாகத் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் பருக்கள் குறையும். கோதுமைத் தவிடு ஒரு தேக்கரண்டி சந்தனப் பவுடர் ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் கலந்து முகத்தில் தடவிக் காய்ந்ததும் எடுத்து விடவும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்க்கவும். இது சருமத்திலுள்ள அதிகப் படியான எண்ணெய் பசையை அகற்றும்.
பருத்தொல்லைக்கு பொடுகும் ஒரு முக்கிய காரணம். கூந்தலை இளஞ்சூடான எண்ணெயால் மசாஜ் செய்து தயிர் உபயோகித்துக் குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.