ஒரு விளம்பரத்தில் எதிராகவும் ஒரு விளம்பரத்தில் ஆதரவாகவும் பேசும் கஸ்தூரி பாட்டி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தற்போதே கஸ்தூரி பாட்டிக்கும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் கடுமையான விளம்பர போர்களத்தில் குதித்துள்ளன.
இரு கட்சிகளுமே தங்களது ஆதரவான தொலைக்காட்சி நிறுவனங்களையும் தாண்டி பொதுவான நிறுவனங்களிலும் போட்டி போட்டு விளம்பரங்களை அள்ளி வீசி வருகின்றன.
இதில் திமுக விளம்பரங்களில் கடந்த ஐந்தாண்டு கால அதிமுக அரசு குறித்து “சொன்னீங்களே செஞ்சிங்களா ? ” என்ற தொணி பொருளில் விமர்சனங்கள் முழுக்க முழுக்க இருக்கின்றன.
பெரும்பாலும், ஸ்டாலின் திமுக என்ன செய்ய உள்ளது என்பது குறித்து விளக்கும் விளம்பரங்களைவிட, அதிமுக அரசை தாக்கி பேசும் விளம்பரங்களே அதிக அளவில் காண்பிக்கப்படுகின்றன.
ஏசியில் அமர்ந்திருப்பவருக்கு மக்கள் கஷ்டம் எப்படி தெரியும், அப்படி என்னங்க அலட்சியம்.. நடு ராத்திரியில் தண்ணிய திறந்து விடுறீங்க.. என்பது போன்ற வசனங்களுடன், சாமானிய பெண்கள் போல தோற்றம் கொண்டோரை வைத்து அரசுக்கு எதிராக உணர்ச்சி மயமான விளம்பரங்களை திமுக பிரசாரம் செய்கிறது.
அதே சமயம், அதிமுக விளம்பரங்களில், எதிர்தரப்பு தாக்குதல் எதுவும் இல்லை. தங்களது சாதனைகளை கூறியே விளம்பரங்கள் வருகின்றன. அதிலும் ஏழை பெண்கள் போன்ற தோற்றம் கொண்டவர்கள், உணர்ச்சியாக பேசி ‘அம்மாவை’ புகழ்கிறார்கள்.
“வானத்தில பறக்குறவங்களுக்கு, நம்மளுடைய பிரச்சினை எப்படிங்க தெரியும்? மக்கள பத்தியே கவலப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா…” இந்த வார்த்தையை உணர்ச்சி பொங்க கையை ஆட்டியபடியே, ஒரு வயதான மூதாட்டி சொல்வது போன்ற திமுக விளம்பரங்களை அடிக்கடி தொலைகாட்சிகளில் பார்ப்பதுண்டு
குறித்த விளம்பரம் பெருமளவில் மக்களிடம் சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதே பெண்மணிதான், அதிமுக விளம்பரத்தில் ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்து நடித்துள்ளார் என்பது தான் இதில் சிறப்பு.
கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானம் திட்டத்தால் பலன் அடைந்த பெண்மணி போல நடித்து அதிமுக அரசை வாழ்த்தும் விளம்பரம் ஒன்றிலும் இதே பெண்மணிதான் நடித்துள்ளார்.