ஒடிசா சட்டப் பேரவையில், முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் பட்நாயக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டமுதல்வர் நவீன் பட்நாயக், இரங்கல் கூட்டம் நிறைவடைந்தவுடன் வெளியேற முயன்றார்,
அப்போது, இடஒதுக்கீடு காலி இடங்கள் சட்டத்தை அமல்படுத்தக்கோரி எதிர்கட்சிகளின் எஸ்சி, எஸ்டி, எம்எல்ஏக்கள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டார், இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் பிரபுல்லா மஜ்ஜி தெரிவிக்கையில், மாநில மக்கள்தொகையில் 38% ஆக இருக்கும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் நலனுக்காக காலில் விழுந்து கெஞ்சுவதில் தவறில்லை.
ஆனால் இரக்கமற்ற மனம் படைத்த முதல்வர் எங்களைப் புறக்கணித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆளுங்கட்சியானபிஜு ஜனதாதள செய்தித் தொடர்பாளர் சசிபூஷன் பெஹெரா தெரிவிக்கையில், சட்டப்பேரவையின் புனிதத்தை மீறக்கூடாது. ஜனநாயக முறையின் படியே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.