வவுனியாவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளங்களை புனரமைக்குமாறு கோரிக்கை!!

1293

 
வவுனியா மாவட்டத்திலுள்ள நீண்டகாலமாக புனரமைக்காது கைவிடப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம்(18.05) வவுனியா மாவட்ட செயலகத்தில் மத்திய நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜயமுனி சொய்சா அவர்களுடனான் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்..

வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது பாழடைந்த நிலையில் உள்ளன. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றதால் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடாமல் இருந்தமையால் பல குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் காடுகளாக காட்சியளிக்கிறன. இவற்றை புனரமைத்து மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.

அத்துடன் வவுனியா மாவட்டம் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டவர்கள் அதிகம் வாழும் மாவட்டமாகும். எனவே பாடசாலைகளில் வடிகட்டிய சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மத்திய அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்தோடு வவுனியாவில் நீரின் தரத்தை பரிசோதனை செய்யும் உபகரண வசதிகள் இல்லை. இவற்றையும் வழங்க ஆவன செய்யவேண்டுமெனக் கேட்டுகொண்டார் .

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜமுனி சொய்சா, திருத்தப்படவேண்டிய குளங்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அத்துடன் குடிநீர்வசதி தேவைப்படும் பாடசாலைகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுகொண்டார்.

அத்துடன் நீரின் தரத்தை பரிசோதனை செய்யும் நடமாடும் உபகரணத் தொகுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

a b c d