சீனாவில் வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைப்பதால், வித்தியாசமான முறையில் உருவான தர்பூசணி உடைகள் அங்கு பிரபலமாகி வருகிறன.
சீனாவில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெப்பநிலை உயரும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வென்சூ நகரை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தையை வெயிலில் இருந்து பாதுகாக்க புதுவிதமான ஆடை ஒன்றை உருவாக்கி உள்ளார். இவரது எளிமையான கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் குவிந்ததுடன், இணையத்திலும் பிரபலமாகி வருகிறது.
அப்படி என்ன தான் கண்டுபிடித்தார் என்றால் ஒரு தர்பூசணியை எடுத்து அதன் சதை பகுதியை நீக்கினார். பின்னர் தோல் பகுதியில் பெல்ட் கோர்த்து, 2 துளைகள் இட்டு குழந்தைக்கு மாட்டி விட்டார். தர்பூசணியிலேயே தொப்பியும் காலணியும் தயாரித்து அணிவித்தார்.
தர்பூசணி உடையின் குளிர்ச்சியால் சிரித்த தனது குழந்தையை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார், அவ்வளவுதான். இதற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தவுடன், பலரும் குழந்தைகளுக்கு தர்பூசணி ஆடையை அணிவிக்க தொடங்கி விட்டனர்.








