தமிழ்தான் கற்றுக்கொள்வதற்கு எளிதான மொழி. அதை நான் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் தமன்னா. இந்தியை தாய் மொழியாக கொண்டவர். கேடி படத்தில் அறிமுகமான போது தமிழ் என்ற பெயரை டமிள் என்றுதான் சொன்னார். இப்போது தமிழில் சரளமாக பேசும் அளவுக்கு தன்னை தயார்படுத்தி இருக்கிறார்.
தமிழ் பேசும் தமன்னாவின் ஆர்வம் வெளி மாநிலங்களில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் தமிழில் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூட பேச முடியாத மற்ற நடிகைகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சரளமாக தமிழ் பேசுவது குறித்து தமன்னா தெரிவிக்கையில்
எதைச் செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். நான் தமிழ் பேசுவதற்கும் அதுதான் காரணம். நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் இது எப்படி என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதிசயமாக பார்க்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போதே நிச்சயம் தமிழ் பேச வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக தினமும் பயிற்சி செய்து வந்தேன். அதனால் இந்த அளவுக்கு என்னால் தமிழ் பேச முடிகிறது. என்னைப் பொருத்தவரை எளிதில் பேசக்கூடிய மொழி தமிழ்தான். மற்றவர்களும் இதை உணர்ந்தால் தமிழில் பேசலாம்.
இப்போது நான் தமிழ் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பேசுகிறேன். நடிப்பு, நடனம், கவர்ச்சி மட்டும் கதாநாயகிகளின் வேலை அல்ல. தங்கள் வசனங்களையும் டப்பிங் பேசினால்தான் முழுமை கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி என்று தெரிவித்தார்.






