பட்டினியால் வயதான தம்பதி மரணம்: ஆதரவில்லாததால் பரிதாபம்!!

1025

couple-dying-embrace-588638
பெங்களூரில் முதிய வயது தம்பதி உணவின்றி பட்டினியால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூர் நகர ஆயுதப் படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் வினோபா ராவ் (80). இவர் பெங்களூர் சுல்தான் பாலையாவில் உள்ள தனது வீட்டில் மனைவி கலாவதி பாய் (72) உடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வினோபா ராவ் வீட்டில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை துர்நாற்றம் வந்ததால் அருகில் வசித்தவர்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அப்போது வீட்டின் வரவேற்பு அறையில் வினோபா ராவும், படுக்கையறையில் அவரது மனைவி கலாவதிபாயும் இறந்து, உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடல்களை மீட்ட பொலிஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பெங்களூரு ஆர்.டி.நகர் பொலிசார் கூறும் போது, “வினோபா ராவ் தம்பதி நீண்டகாலமாக தனிமையில் வசித்துள்ளனர். அவர்களுக்கு பிள்ளைகளோ நெருங்கிய உறவினர்களோ இல்லாததால் ஆதரவற்ற நிலையில் தவித்துள்ளனர்.

இருவரும் இயற்கையான முறையிலே இறந்துள்ளனர். இதில் கலாவதி பாய் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம்.வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு சமீபத்தில் உணவு சமைத்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. முதல்கட்ட விசாரணையில் பட்டினி மற்றும் ஆதரவற்ற நிலை காரணமாகவே இருவரும் இறந்துள்ளனர்.வினோபாராவ் தம்பதி வசித்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. வீட்டை பராமரிக்க யாரும் இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் காவிரி குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே நீரும், மின்சாரமும் இல்லாத வீட்டிலேயே இருவரும் வசித்துள்ளனர்” என்றனர்.