அமெரிக்காவில் காதலியுடன் பூங்காவுக்கு சென்ற இளைஞர் தேனீக்கள் கொட்டியதில் விஷம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்தவர் அலெஸ் பெஸ்ட்லர் (23). இவர் தனது காதலி சான் யாவுடன் லூசியானாவில் மலைப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்று இருந்தார்.
அப்போது அங்கு இருந்த தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென பறந்து வந்து பெஸ்ட்லரையும் அவரது காதலி சான்யாவையும் கொட்டியது. இதனால் மிரண்ட சான்யா அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பினார்.
ஆனால் பெஸ்ட்லர் தேனீக்களிடம் சிக்கி கொண்டார். அவரை தேனீக்கள் கூட்டம் உடல் முழுவதும் மொய்த்து கொடுக்குகளால் கொட்டித் தீர்த்தது.
இதற்கிடையே தேனீக்களிடம் இருந்து அவரை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெஸ்ட்லரும், அவரது காதலியும் தேனீக்களை கோபப்படுத்தவில்லை. இருந்தாலும் அவை கோபமடைந்து 1000 தடவைக்கு மேல் கொட்டியுள்ளன என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.






