ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இலங்கை வீரர் விசாரணையில்!!

340

bpl

பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தொடரின் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு இலங்கை வீரர் ஒருவர் அணுகப்பட்ட போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார். எனினும் இது குறித்த அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தகவல் வழங்கி இருக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வீரர் நேற்றையதினம் இலங்கை கிரிக்கட் நிறைவேற்று குழுவின் முன்னால் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

குற்றம் சுத்தப்பட்டுள்ள வீரர் முன்னர் இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடி இருந்த போதும் பின்னர் சரியாக திறமையை வெளிப்படுத்தாக காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் டாக்கா கிளேடியேட்டர் அணியில் பங்கு பற்றி இருந்த 9 வீரர்கள் ஆட்டநிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த 9 வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படமாட்டாது என்று சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

குறித்த 9 வீரர்களில் 7 பேர் மீது பணத்துக்காக போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேநேரம் இருவர் இந்த ஆட்ட நிர்ணயம் குறித்த தகவல்களை அறிந்திருந்த போதும், அதனை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவல்களை வழங்காத இரண்டு வீரர்களில் ஒருவர் இலங்கையர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.