மினி உலக கிண்ண போட்டிகள் இன்று தொடக்கம்

449

ICC

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் பாகிஸ்தான், இங்கிலாந்து தவிர மற்ற அணிகள் அனைத்தும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்தப் போட்டிதான் கடைசி சம்பியன்ஸ் கிண்ண போட்டியாகும். 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி 2017-ம் ஆண்டு முதல் டெஸ்ட் சம்பியன்ஸ் நடைபெறவிருப்பதன் காரணமாக இந்த ஆண்டோடு நிறுத்தப்படுகிறது.

கார்டிஃப் நகரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.15 மாதங்களுக்குப் பிறகு ஆசியாவுக்கு வெளியில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது இந்திய அணி.

சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ் சிங் போன்ற மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது டோணி தலைமையிலான இந்திய அணி. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் , முரளி விஜய் ஆகியோர் சரியாக விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாகும். எனினும் மதிய வரிசையில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரைனா, தினேஷ் கார்த்திக், அணித்தலைவர் டோணி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணியில் மூத்த வீரர்களான ஜக்ஸ் கலிஸ், ஸ்மித் ஆகியோர் இடம்பெறாத நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சுழற்பந்துவீச்சாளர் ரொபின் பீட்டர்சன் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது பின்னடைவாக அமைந்துள்ளது.

அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், டேவிட் மில்லர் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.

வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல், சோட்சோபி, கிளெய்ன்வெல்ட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரொபின் பீட்டர்சன் இடம்பெறாத பட்சத்தில் அரோன் பங்கிசோ இடம்பெறலாம்.

இன்றைய போட்டியில் சம பலம் உள்ள இரு அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை..