வடக்கிலிருந்து இராணுவத்தை முற்று முழுதாக அகற்ற வேண்டும் : வவுனியாவில் விக்னேஸ்வரன்!!

944

Vigneswaran

வவுனியா உள்ளூராட்சித் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு தெரிவித்தார்..

இன்றைய கூட்டத்தில் முதலமைச்சருடைய அமைச்சு தொடர்பான விடயங்களை ஆராய்ந்தோம். கடந்த வருடம் நாம் செய்யவில்லையென கூறுகின்றனர். எனினும் கடந்த வருடம் 95 சதவீதத்திற்கு மேல் நிதியை செலவளித்துள்ளோம்.

இந்த வருடத்திற்கு செய்ய வேண்டிய வேலைகள் உள்ளது. அதனடிப்படையில் இந்த வருடம் முன்கூட்டியே வேலைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கான மீளாய்வை தற்போது செய்துள்ளோம். இதில் எமக்கு திருப்திகரமாக அமையவில்லை. இருந்த போதும் அதற்குரிய நடவடிக்கையை செய்ய வேண்டுமென கலந்துரையாடியுள்ளோம்.

கடந்த வருடம் 95 சதவீதத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். இவ் வருடம் 100 வீதம் செய்ய வேண்டும் என்பதே எமது இலக்கு.

போதுமான நிதி மத்திய அமைச்சிடம் கேட்டும் கிடைப்பதில்லை. எமக்கு நிதியானது பல திட்டங்களின் கீழ் வருகின்றது. 10 மில்லியன் ரூபா நிதியானது இரண்டு கிழமைக்கு முன்னர் தான் கிடைத்திருக்கின்றது. நாம் வேலைகளை செய்து முடிப்போம்.

வட பகுதியில் இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கிறேன். இராணுவத்தை முற்று முழுதாக அகற்ற வேண்டும் என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றேன்.

இலங்கையின் மீன் தேவையை மூன்றில் ஒரு பங்கை மயிலிட்டியிலிருந்தே வழங்கி வந்தோம். தற்போது அதனை முழுமையாக மூடியுள்ளார்கள். அதனை திறக்குமாறு கூறிய போது பல்வேறு காரணங்களை கூறி இறுதியாக ஆயுதக்கிடங்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மயிலிட்டியிலிருந்து மாற்றுமாறு இராணுவ அதிகாரி மகேஷ் சேனநாயக்கவுக்கு நான் கூறியிருந்தேன். அதற்கு சில காலம் எடுக்கும்மென ஒருமாதத்திற்கு முன்னர் கூறியிருக்கின்றார்.

எனவே கொஸ்கம போல் நடந்துவிட்டால் எங்களது இடங்களெல்லாம் பாழாய் போய்விடும். கொஸ்கமவில் நடந்தது வருந்தத்தக்கது. எனினும் எங்களுக்கு ஒரு படிப்பினையும் தந்திருக்கின்றது.

ஆயுதக்கிடங்கை மயிலிட்டியில் வைத்துக்கொண்டு எமது இயற்கை துறைமுகத்தை செயற்படாமல் வைப்பது அநியாயமான ஒரு செயல். இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம்.

இதே சமயம் தாண்டிக்குளம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு புதிய இடத்தினை தெரிவு செய்துள்ளோம். அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம். அனேகமாக இந்த வாரத்துக்குள் தெரிய வருமெனத் தெரிவித்தார்.

இறுதியாக ஒரு கேள்வி வடக்கு முதலமைச்சராக நீதித்துறையைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க சிலர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைகிறீர்கள் எனக்கேட்டபோது,

இதுவரை எனக்கு எவரும் இது தொடர்பாக சொல்லவில்லை. என்னிடமே கேட்டு வருகின்றனர். கடவுளே பார்த்துக்கொள்வாரென கூறியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.