காக்கிச் சட்டைக்கும் கௌரவம் சேர்க்கும் வகையில் ஜெயம் ரவியும், அரவிந்த் சாமியும் போகன் படத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ரோமியோ ஜுலியட் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி-ஹன்சிகா கூட்டணி மீண்டும் போகன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தை ரோமியோ ஜுலியட் பட இயக்குனர் லஷ்மண் இயக்கி வருகிறார். மேலும், அரவிந்த் சாமி, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ-வில்லன் என இரு வேறு குணாதிசயங்களை வெளிக் கொண்டுவரும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவரைப்போலவே அரவிந்த் சாமியும் ஹீரோ-வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை பற்றி இயக்குனர் லஷ்மண் கூறும்போது,
ரோமியோ ஜூலியட் எப்படி ஜாலியான காதல் கதையாக இருந்ததோ. போகன் அப்படி இல்லை. இது பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். இதிலும் மெலிதான காமெடி, படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.






