102 வயது செல்லம்மாவை அசத்தும் 149 பூட்டப்பிள்ளைகள்!!

341

2

மட்டக்களப்பு தாளங்குடாவை தாண்டியவுடன் வருகின்ற புதுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் வசிப்பவர்தான் இந்த கொல்லுப்பாட்டி செம்பாப்போடி செல்லம்மா.

செல்லம்மாவுக்கு தான் பிறந்த வருடம், தெரியாதாம், அங்கு நின்றவர்கள் கூறினார்கள் 1914 ஆம் ஆண்டு செல்லம்மா பிறந்திருக்கின்றார் என்று. அதனால் செல்லம்மாவுக்கு 102 வயது இருக்கும் என செல்லம்மாவின் கடைசி மகள் தெரிவித்தார்.

செல்லம்மா தனது வாழ்நாளில் வெகு விரைவில் ஐந்தாவது தலைமுறையைக் காணப்போகின்றார் என செல்லம்மாவின் பூட்டப்பிள்ளையொருவர் தெரிவித்தார்.

செல்லம்மாவுக்கு 12 பிள்ளைகள், 61க்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகள், 149க்கும் மேற்பட்ட பூட்டப்பிள்ளைகள், 26க்கும் மேற்ப்பட்ட கொள்ளுப்பிள்ளைகள் இருக்கு என செல்லம்மாவின் கடைசி மகள் கணக்கு காட்டினார்.

செல்லம்மாவின் அத்தனை பிள்ளைகளும் மாவட்டத்தையும் தாண்டி பல ஊர்களில் வசிக்கின்றர்கள் என தெரிவித்துள்ளனர்.

ஆச்சி தனக்கு நடந்த திருமண சம்பவத்தை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். ”எனக்கு 13 வயசில கல்யாணம் நடந்திச்சு.

அது ஒரு பெரிய கதடா மகனே! நான் ஆறாம் வகுப்பு வரைதான் படிச்ச. ஒரு நாள் அம்மாவும், அப்பாவும் என்ன அம்மாட தங்கச்சிட வீட்ட விட்டுட்டு போரதீவு காளியம்மன் கோயிலுக்குப் போயிட்டாங்க.

அந்தநேரம் பாத்து மாமாட மகன் வீட்ட வந்து என்னத் தூக்கித்து போயிட்டாரு (சிரிக்கிறார்) பிறகு அப்பா வந்து பிரச்சினப்பட்டு பெரிய புதினமெல்லாம் நடந்தது.

பிறகு எல்லாம் சரியாப் போயிட்டது. அப்ப 14 வயசில பிள்ளப்பெத்த நான். அந்நேரம் சோறு, கறியெல்லாம் நல்ல ருசியா இருக்கும். மண் சட்டியிலதான் சமைக்கிறது.

மீனெண்டா பெரிய பெரிய மீன் இவர் வாங்கிட்டு வருவார். இப்ப சோறு, கறியெல்லாம் நஞ்சாப் போச்சி. பிள்ள பெத்தா மிளகு தண்ணிச் சாப்பாடுதான் தருவாங்க.

பத்தியச் சாப்பாடு சாப்பிடடுத்தான் வளர்ந்தோம் . எங்கயும் தூரப் போறதெண்டா கரத்தையில தான் (மாட்டு வண்டி) போறது.

என்னவும் என்டால் சொந்த பந்தமெல்லாம் ஒரு இடத்தில கூடிடுவோம். இப்ப சொந்த பந்தங்கள பாக்கிறதே கஷ்டமாயிருக்குது.

இங்க இருக்கிற கண்ணாமுனைப் பிள்ளையார இவரும் நானுந்தான் சிறாம்பிகட்டி வச்சுக் கும்பிட்டு வநதோம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொங்கிப் பூஜையும் செய்வோம்.

என்னுடை பிள்ளைகள், பேரப்பிள்ளையள், பூட்டப்பிள்ளைகள் எல்லாம் என்ன நல்லாப் பாக்குதுகள். இப்ப அரசாங்கத்தால 2250 ரூபா தாராங்க.

அதில மாப்பெட்டி, தைலம் எல்லாம் வாங்குவேன். அந்த காலத்தப்போல இந்தக்காலம் இல்ல. உடம்புல வருத்தமெண்டா நாட்டு வைத்தியந்தான் செய்யிறது.

வீட்டில சும்மா இருக்க மாட்டோம் ஏதாவது ஒரு வேலைய செய்து கொண்டுதான் இருபபோம். இப்ப ரெண்டொரு நாளாத்தான் நெஞ்சிக்க நோவுதுடா மகனே” என செல்லம்மா ஆச்சி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

செல்லம்மா ஆச்சி தமது அன்றாடக் கடமைகளைத் தானே செய்வது, மூன்று நேரம் தவறாது சாமி கும்பிடுவது போன்றவற்றைச் செய்து வருகின்றார்.

சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் மனப்பாடம் செய்த தேவாரங்களைப் படிப்பது, தனது பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளிடம் பழங்காலத்துக்கதைகளைக் கதைப்பது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்.

அத்துடன் செல்லம்மா ஆச்சியின் கட்டில் வெறும் மரத்தினாலான பலகையைக் கொண்டு செய்யப்பட்டது, அது தற்பொழுது உடைந்த நிலையில் இருக்கின்றது.

தனது கடமைகளை தானாகவே செய்து வந்த நிலையில் தற்பொழுது ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது. அதனால் பிடித்து நடக்கும் ஊன்று கோல் மற்றும் நூளம்பு வலை போன்ற பொருட்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த பாட்டியின் வறுமை நிலையினைக் கொண்டு நல்ல உள்ளம் படைத்த உறவுகள் தனக்கு உதவி செய்தால் தன்னுடைய பிள்ளைபோல் அவர்களையும் நேசிப்பேன் என செல்லம்மா ஆச்சி மனமுருக கேட்டுக்கொண்டார்.

இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் முதுமை அடைந்தால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றார்கள்.

ஆனால் செல்லம்மா ஆச்சிக்கு அந்த குறையில்லை. வசதி இல்லாத நிலையிலும், எல்லாப் பிள்ளைகளும் தன்னை கவனித்துக் கொள்கின்றார்கள் என்றார்.

செல்லம்மா ஆச்சி சொல்வதைப் போல அந்தக் காலத்தில் உரலில் நெல் குத்தி, அம்மியில் மஞ்சள் அரைத்து, ஆட்டுக்கல்லில் உழுந்து அரைத்து, கிணற்று வாளியில் நீர் அள்ளி உடலுக்குக் கொடுத்த பயிற்சியும் அவரது உணவுப் பழக்க வழக்கமுமே இத்தனை காலமும் அவர் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு காரணமாக இருக்க முடியும்.

இன்று பலர் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியாத நிலையிலே இருக்கின்றனர். சொகுசு வாழ்க்கை கூடிவிட்டதால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியம் இன்றி மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையேனும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம்.

இன்று முதுகு கூனியிருந்தாலும் முதுமையின் அடையாளமாக எம்மத்தியில் வாழும் செல்லம்மா ஆச்சி இருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.

தொடர்புகளுக்கு : 0094-779043523

4 5 6