இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பாவே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!!

461

Zimbabwean players celebrate after winning the T20 International cricket match against India at Harare Sports Club, Saturday, June, 18, 2016. The Indian cricket team is in Zimbabwe for One Day International and T20 matches. (AP Photo/Tsvangirayi Mukwazhi)

இந்தியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் சிம்பாவே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றது. தற்போது 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் T20 போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி பந்துவீசமுடிவு செய்தார். அதன்படி, சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

சிம்பாவே அணிக்கு மசகட்சா 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிபாபா 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிச்மண்ட் (0) ’ரிட்டயட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.

இதனையடுத்து வந்த வாலர் 30 ஓட்டங்களிலும், சிக்கந்தர் 20 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதன் பின்னர் தனியாளாக அதிரடி காட்ட ஆரம்பித்தார் சிகும்புரா. சிக்சராக பறக்கவிட்ட அவர் அரைசதம் கடந்தார்.

இறுதியில் சிம்பாவே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. சிகும்புரா (54), மட்ஜிவா (5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில், பும்ரா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ராகுல் முதல் பந்திலே டக்-அவுட்டாக வெளியேறினார். ராயுடு 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய மந்தீப் சிங் 31 ஓட்டங்களும், அதிரடியாக ஆடிய மணீஷ் பாண்டே 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பதற்றமான சூழ்நிலையில் டோனி, அக்சர் படேல் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இந்த நேரத்தில் அக்சர் படேல் (18) ஆட்டமிழக்க மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

கடைசி ஓவரில் ரிஷி தவான் பந்துகளை வீணடிக்க, இந்திய அணியால் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் 2 ஓட்டங்களால் சிம்பாவே வெற்றி பெற்றது. டோனி (19), ரிஷி தவான் (1) களத்தில் இருந்தனர்.