
அமெரிக்காவில் விமான பயணத்தின் போது தனியாக பயணித்த சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை தந்து வந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து போர்ட்லேண்ட் செல்லும் விமானத்தில் கடந்த புதன் அன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானத்தில் குறிப்பிட்ட சிறுமி பெற்றோர் துணையின்றி தனியாக பயணித்துள்ளார். அவரது அருகாமையில் வந்து அமர்ந்த 26 வயது சாட் கேம்ப் என்பவர் அந்த 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை தர துவங்கியுள்ளார்.அச்சிறுமி மீது சாய்ந்து கொண்டு அவரது தொடை மீது 3 முறை கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முழங்கையால் அடிக்கடி சிறுமியை சீண்டவும் செய்துள்ளார்.
இதனிடையே விமான பணிப்பெண் ஒருவர் சிறுமியின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர் கண்டு அதிர்ச்சியுற்று அந்த இளைஞனை வேறு இருக்கையில் அமரும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து ஒரேகான் (Oregon) விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் பொலிசாரால் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டின் மீது குறிப்பிட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் பெற்றோர் விமான நிறுவனம் மீது உரிமையியல் வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த விமான நிறுவனத்தின் கொள்கைப்படி, பெற்றோர் துணையில்லாத 5-17 வயதுடைய சிறுவர்களுக்கு பயண கட்டணத்தில் மேலதிகமாக 150 டொலர்கள் தரவேண்டும். பணம் அதிகம் பெற்றிருந்தும் தமது மகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அந்த நிறுவனம் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் கைது செய்துள்ள கேம்ப் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





