மட்டக்களப்பில் அரச வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மை : மாணவன் பலி!!

274

Batticalo Student Dead

அரச வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையால் சிறுவனின் உயிர் காவு கொள்ளப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளமை அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளாந்தம் பல மில்லியன் ரூபா செலவில் இலசவமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சை முறையில், சில வைத்தியசாலைகளின் பொறுப்பற்ற தன்மை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

களுவாஞ்சிகுடி மாரியம்மன் வீதியை சேர்ந்த ஏழு வயது மாணவனான மேகநாதன் மோகவர்மன் காய்ச்சல் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அண்மையில், அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, ஒன்பது மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையால் சிறுவனின் உயிர் காவுகொள்ளப்பட்டது.

இதனையடுத்து, பெற்றோர் தமது நியாயத்திற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சு உட்பட பல நீதி வழங்கும் அமைப்புக்களுக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இறுதியாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில், பெற்றோர் தமது முறைப்பாட்டை கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எனது மகனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 11 ஆம் திகதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டன.

மறுநாள் மகனை திரும்பவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்து அன்று பிற்பகல் 4.00 மணியளவில் வைத்தியசாலை விடுதியில் அனுமதித்தனர்.

அதன்பின்னர் 14 ஆம் திகதி காலையில் காய்ச்சல் முற்றாக குணமடைந்து விட்டதாக கடமையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் அன்று, சுமார் நண்பகல் 12.00 மணியளவில் எனது மகன் வாந்தி எடுத்தான், வயிற்று நோவும் ஏற்பட்டது என அங்கு கடமையில் இருந்தவர்களுக்கு எமக்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது, ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறி 14 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றடைந்ததும் அனுமதிக்கும் பிரிவில் இருந்த வைத்தியர் மகனின் நோய் நிலைமையினை அறியாது அவரது கருத்து நகைச்சுவையாக அமைந்தது.

இது என்னை மிகவும் கவலையடையச் செய்தது. பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து வாந்தி குறைவடைவதற்கு ஊசி போடப்பட்டன.

மீண்டும் வாந்தி வந்தது. அதனுடன் வயிற்று நோ உள்ளதாகவும் கூறினான். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இரவு 10.00 மணிக்கு 33 ஆம் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் வேதனை தாங்க முடியாது கடமையிலிருந்த உத்தியோகத்தர்களிடம் எடுத்துக் கூறினேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் ஊசி போட்டிருக்கின்றோம். குணமடையும் எனவும் கூறினார்கள்.

மகனின் நிலைமையை உணர்ந்து பல தடவைகள் எடுத்துக்கூறிய போதிலும் கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் பொறுப்பற்ற தன்மையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அவதியுற்ற நிலையில் மகன் 15 ஆம் திகதி காலை 4.00 மணியளவில் டொக்டர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டுக் கத்தினான். அதற்கு உத்தியோகத்தர்கள், பெரிய ஐயா காலையில் வந்து பார்ப்பார் என்று பதிலளித்தனர்.

பின்னர் 5.30 மணியளவில் எனது மகன் துடித்துப் புரண்டு சோர்வடைந்தான். அந்த நிலையில் கடமையில் இருந்த தாதிகளிடம் ஓடிச் சென்று சம்பவத்தினைக் கூறினேன்.

அவர்கள் பக்கத்துவிடுதி வைத்தியரை அழைத்து வந்தனர். நிலைமை மோசமான போது அங்கும் இங்கும் அதை எடு, இதை எடு என மாறிமாறி ஓடினார்களே தவிர அவசரத்திற்கு பொருத்துவதற்கான எந்தவிதமான கருவிகளும் தயார் நிலையில் இருக்க வில்லை.

அதிகாலை 5.45 மணியளவில் அப்போது இருந்த வைத்தியர் யாருக்கோ தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒரிரு நிமிடங்கள் வரை ஏதோ வயர்களை பொருத்த முற்பட்டனர்.

பின் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்தனர் பொருத்த முயன்ற அச் செயலை கைவிட்டனர். அப்போது எனது மகன் உயிர் பிரிந்ததை அறிந்து கொண்டேன்.

இதுதான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேரடியாக அனுபவித்த சம்பவம். வைத்தியர்களின் கவலையீனமே எனது மகனின் மரணத்திற்கு காரணம். எனது மகனின் மரணத்திற்கு அன்றை தினம் கடமையில் இருந்த வைத்தியரும் தாதிமார்களும் பதில் கூறியே ஆக வேண்டும்.

மனித உரிமைகள் ஆணைக்குழு மூலமாக இதற்கு நீதியான தீர்வினை பெற்றுத்தருவதுடன் எதிர் காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் யாருக்கும் இடம் பெறக் கூடாது என உயிரழந்த மாணவனின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுக்கு சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

-தமிழ் CNN-