மின்சாரம் பயன்படுத்தாமல் அறையை குளிரூட்டும் எளிய முறையை பயன்படுத்தி இந்தியாவில் திரளானோர் பயன்பெற்று வருகின்றனர்.கோடையின் வெப்பத்தை தணிக்க பெரும்பாலான வசதி படைத்தவர்கள் மின்சார குளிரூட்டியை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் அடித்தட்டு மக்களின் வசதிக்கு ஏற்றவகையில் மின்சாரம் இல்லாமல் அறையை குளிரூட்டும் எளியமுறையை Grameen Intel எனும் அமைப்பு ஒரு விளம்பர நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது.
வங்கதேசத்தில் முதன்முறையாக இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகண்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடித்தட்டு மக்களின் தேவையை இனம்கண்டு இந்த குளிரூட்டியை நிறுவி வருகின்றனர்.வங்கதேசத்தில் மட்டும் இந்த அமைப்பால் 25,000 வீடுகளில் மின்சாரம் தேவையில்லாத குளிரூட்டி நிறுவப்பட்டுள்ளது. இதேப்போன்று இந்தியாவிலும் இதே அளவு எண்ணிக்கையிலான வீடுகளில் குளிரூட்டிகள் பயன்பாட்டில் உள்ளது.
இந்த சிறப்பு குளிரூட்டியை உருவாக்குவதற்கு தடிமனான கனரக அட்டையும் ஏராளமான பயன்படுத்தப்பட்ட குளிர்பான பாட்டில்களும் போதுமானது. முதலில் எந்த அறை சன்னலில் நாம் இந்த குளிரூட்டியை பயன்படுத்த இருக்கிறோமோ அந்த அளவிற்கு கனரக அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் grid pattern முறையில் அந்த அட்டையில் பாட்டிலின் வாய்ப்பகுதியை இணைத்துக்கொள்ளும் வகையில் துவாரங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாட்டில்கள் அளவில் பெரிதாக இருத்தல் வேண்டும்.
இதனையடுத்து பாட்டில்கள்களின் பாதியை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், கூடவே பாட்டில் மூடிகளின் மேற்பகுதியையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் ஒவ்வொரு பாட்டிலாக அட்டையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள துவாரங்களில் பாட்டிலின் வாய்ப்பகுதியை மூடியுடன் இணைக்க வேண்டும். அடுத்த கட்டமாக பாட்டில்களின் உடற்பகுதி கொண்ட அமைப்பு முழுவதும் சன்னலின் வெளியே இருக்கும்படி அட்டையை சன்னலுடன் இணைக்க வேண்டும்.
இப்போது அறைக்குள்ளே சன்னலில் பாட்டில்களின் வாய்ப்பகுதி மட்டுமே தெரியும். இதனால் இந்த அமைப்பு வழியாக அதிக வெப்பம் கொண்ட வெளிக்காற்று ஒவ்வொரு பாட்டில் வழியாகவும் உள்ளே வரும், அப்போது அந்த பாட்டிலின் வாய்ப்பகுதி விரிவடைய முயற்சிப்பதால் உள்ளே வரும் காற்று குளிரடையும், இதனால் அறையும் 9 டிகிரி வரை குளிர்ச்சியடையும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.