காபூலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் : 20 இற்கும் மேற்பட்டோர் பலி!!

513

kabul

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு பாதுகாப்பு படையினரை அழைத்து சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத்தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஜலாலாபாத்திற்கு செல்லும் சாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஸ்ஸில் நேபாள நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

குண்டு வெடிப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிகமான அம்புலன்ஸ்கள் சென்றுள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். புனித ரம்ழான் நோன்பு தொடங்கிய பின்னர் காபூலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்தனர். 340 இற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. கடந்த மே மாதம் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா அக்தர் மன்சூரை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி கொன்றது.

தற்போது காபூல் நகரில் இராணுவ வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.