பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மகள் பலியானதை தொடர்ந்து அவரது தந்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதில் அமெரிக்கா நாட்டை சேர்ந்த Nohemi என்ற இளம்பெண்ணும் அடங்குவார். கலிபோர்னியாவை விட்டு வெளியேறிய இவர் பாரீஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவரும் பலியானார்.
மகளின் மரணத்தால் வேதனை அடைந்துள்ள தந்தையான Reynaldo Gonzalez என்பவர் சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
கடந்த யூன் 14ம் திகதி கலிபோர்னியாவில் பதியப்பட்ட இந்த வழக்கு குறித்து அவர் பேசியபோது, ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஒருவகையில் இந்த சமூக வலைத்தளங்களும் காரணமாக இருந்துள்ளன.
பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மூலமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தகவல்களை பகிர்ந்துக் கொள்கின்றன. ஏராளமான நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதுடன், புதிய தீவிரவாதிகளையும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவு செய்கின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகள் இந்த சமூக வலைத்தளங்களுக்கு தெரிந்து தான் நடந்துள்ளன என்பதால் அவற்றின் மீது வழக்கு பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.







