விரலால் ஏற்பட்ட விபரீதம் : 5 வயதுக் குழந்தை கோமாவில்!!

627

Baby

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்துவந்த லக்‌ஷய் என்ற ஐந்து வயதுச் சிறுவன் கடந்த பத்தாம் திகதி பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே விழுந்ததில் கைவிரல்கள் இரண்டில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி குழந்தையின் பெற்றோருக்கு தகவல் அளித்த பாடசாலை நிர்வாகம், அவசர சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மணிபால் என்ற தனியார் வைத்தியசாலைக்கு அவனை அனுப்பி வைத்தது.

பதறியடித்து, வைத்தியசாலைக்கு வந்த லக்‌ஷய்-ன் தந்தையான புருஷோத்தமனிடம், இன்னும் ஆறு மணி நேரத்துக்குள் விரலில் சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளது, உடனடியாக 60 ஆயிரம் பணம் கட்டுங்கள் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பிளாஸ்டிக் சேர்ஜரி முறையில் நடத்தப்பட்ட இந்த சத்திர சிகிச்சையின் போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் கடந்த பத்து நாட்களாக கோமா எனப்படும் ஆழ்மயக்க நிலையில் சிறுவன் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதயம் சார்ந்த கோளாறால் ஏற்கனவே லக்‌ஷய் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதை சிறுவனின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களாக எங்கள் குழந்தை கோமாவில் கிடந்தும், இதுவரை எங்களிடம் எந்த வைத்தியர்களும் இதுதொடர்பாக தொடர்பு கொண்டு பேசவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது, உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் சுவாசித்துவரும் லக்‌ஷய் விரைவில் கண்விழிக்க அனைவரும் பிரார்த்திப்போம்.