இத்தாலியின் தலைநகரான ரோமின் மேயராக விர்ஜினியா ரேகி எனும் 37 வயதுப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரோமின் 2700 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நகைச்சுவை நடிகர் பெப் கிரில்லோவால் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “ஐந்து நட்சத்திர இயக்கம்” கட்சி சார்பில் போட்டியிட்ட விர்ஜினியா ரேகியின் வெற்றி, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.
சட்டத்தரணியான விர்ஜினியா ரேகி, உள்ளூர் கவுன்சிலராகப் பதவி வகித்தவர்.
சில மாதங்கள் வரை பெரும்பாலானவர்களால் அறியப்படாத விர்ஜினியா, அரசுக்கு எதிரான கடுமையான பிரசாரத்தின் மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற்று, மேயர் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு பிரபலமடைந்தார் என்று கூறப்படுகிறது.






