வவுனியாவில் நடைபெறவிருந்த கடையடைப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!!

964

Vavuniya

வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 2 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்த முச்சக்கரவண்டியொன்றில் வவுனியாவை வந்தடைந்ததாக தெரியவருகின்றது.

இன் நிலையில் குறித்த வர்த்தகரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

இவர் கடத்தப்பட்டதைக் கண்டித்து நாளை மறுதினம்(24.06.2016) முழுக் கடையடைப்பிற்கு வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இன் நிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடையடைப்புப் போராட்டம் கைவிடப்படுவதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.