நள்ளிரவில் பேருந்தில் தனியாக பயணம் செய்த ஒரு வயது குழந்தை: நடந்தது என்ன?

349

taking+transit+with+a+child
ஜேர்மனி நாட்டில் நள்ளிரவு வேளையில் பேருந்து ஒன்றில் ஒரு வயது ஆண் குழந்தை தனியாக பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முனிச் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றிற்கு 22 வயதான தாய் ஒருவர் அவருடைய ஒரு வயதான ஆண் குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

முனிச் நகரிலிருந்து சுமார் 584 கி.மீ தொலைவில் உள்ள ஜேர்மனியின் தலைநகரான பெர்லின் நகருக்கு பேருந்தில் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். பேருந்து ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர், நீண்ட தூர பயணம் என்பதால், குழந்தையை நன்றாக தூங்க வைத்துள்ளார்.அப்போது, பேருந்தை ஓட்டுனர் எடுக்கும் நேரத்தில் தாயாருக்கு கழிவறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

‘நான் கழிவறைக்கு செல்கிறேன். நான் வரும் வரை தயவுசெய்து பேருந்தை எடுக்க வேண்டாம்’ என தாயார் ஓட்டுனரிடம் தெரிவித்து விட்டு பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் திரும்பி வந்து பார்த்த போது வாகனம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதாவது, ‘பேருந்திற்குள் இருக்கும் கழிவறையில் தான் பெண் இருக்கிறார்’ என தவறாக எண்ணிய ஓட்டுனர் பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

வேதனை அடைந்த பெண் உடனடியாக பேருந்திற்கு சொந்தமான அலுவலக ஊழியர்களை நேரில் சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார்.ஆனால், துரதிஷ்டவசமாக அந்த ஊழியர்களிடம் ஓட்டுனரின் கைப்பேசி எண்கள் இல்லை. அப்போது பொலிசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ஓட்டுனரை தொடர்புக்கொள்ள வழியே இல்லாததால், தாயாரை பின் இருக்கையில் அமர வைத்து பேருந்தை தடுத்து நிறுத்த பொலிசார் புறப்பட்டுள்ளனர்.அதிவிரைவாக பறந்த பொலிசாரின் வாகனம் சுமார் 80 கி.மீ தொலைவை கடந்து சென்றுக்கொண்டு இருந்த அந்த பேருந்தை Ingolstadt என்ற நகரில் மடக்கி பிடித்தனர்.

பேருந்திற்குள் கண்ணீருடன் தாய் நுழைந்து குழந்தையை தேடியபோது, அந்த குழந்தை எவ்வித அசைவும் இன்றி ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளது.அதாவது, 80 கி.மீ தூரத்தையும் குழந்தை தூங்கியவாறே பயணம் செய்துள்ளது. குழந்தை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் தாயார் பொலிசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு அதே பேருந்தில் பெர்லின் நகருக்கு புறப்பட்டார்.