மோசமான காலநிலையால் மலேசிய விமானத்தை தேடும் பணி இடைநிறுத்தம்!!

324

missing flight

மோசமான காலநிலை காரணமாக, விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களைத் தேட இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட முயற்சி இடைநிறுத்தம் என அவுஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு(அம்சா) அறிவித்திருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் மேற்காக இந்தியப் பெருங்கடல் பகுதியில்தான் இந்த விமானம் தனது பயணத்தை முடித்துக்கொண்டதாக செய்கோள் தரவுகள் காட்டுகின்றன என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரஸாக் திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்தத் தேடல் முயற்சியில் பல நாடுகளின் விமானங்கள் ஈடுபட்டிருக்கின்றன.
விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் பல பொருட்கள் இந்தப் பகுதியில் காணப்பட்டாலும், இவை நிச்சயமாக உறுதி செய்யப்படமுடியவில்லை.

இதனிடையே அம்சா வெளியிட்ட ஒரு அறிக்கையில் தற்போதைய கால நிலையில், விமான மற்றும் கடல் மூலம் எந்த ஒரு தேடுதல் வேட்டையையும் நடத்தும் முயற்சிகளால், விமான மற்றும் கப்பல் ஊழியர்களுக்கு ஆபத்துக்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறது.

எனவே இந்தத் தேடுதல் முயற்சியைத் தற்போதைக்கு இடை நிறுத்துவதாகவும் அது கூறுகியிருக்கிறது. இன்னும் குறைந்தது 24 மணிநேரங்களுக்கு இந்தத் தேடல் முயற்சி மீண்டும் தொடங்காது என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் ஜோன்ஸ்டன் கூறியிருக்கிறார்.

“வைக்கோற்போரில் ஊசியை நாங்கள் தேடவில்லை, வைக்கோற்போரே எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறோம்”, என்றார் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் துணைத் தளபதி, மார்க் பின்ஸ்க்கின்.

இதனிடையே, சீனா இந்த விமானம் கடலில் விழுந்தது என்று மலேசிய முடிவு கட்டியிருப்பதற்கு அடிப்படையாக அமைந்த அனைத்துத் தரவுகளையும் தனக்குத் தருமாறு மலேசியாவைக் கோரியிருக்கிறது.

மார்ச் 8ம் திகதி காணாமல் போன இந்த விமானத்தில் பயணித்த 239 பேரில் 153 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த விமானத்தில் பயணித்த சீனர்களின் உறவினர்கள், பீஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மலேசியா இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறது, உண்மைகளைச் சொல்வதைத் தாமதப்படுத்துகிறது, தகவல்களைக் கொச்சைப்படுத்தித் தருகிரது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மலேசியத் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்த அவர்கள் முனைந்த போது அவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்கள் நடந்தன.

மலேசியப் பத்திரிகைகள் பல, இந்த விமானப் பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தங்கள் பக்கங்களை கறுப்பாக்கி நேற்று வெளியிட்டிருந்தன.