மலேசிய விமானத்தைத் தேட ஆளில்லா நீர்மூழ்கியைப் பயன்படுத்த முடிவு!!

286

mal

இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், முதன் முறையாக, ஆளில்லா நீர்மூழ்கி ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறது.

கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடும் முயற்சியில், புளூபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி விரைவில் பயன்படுத்தப்படும் என்று தேடும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கும் ஆங்கஸ் ஹூஸ்டன் கூறியிருக்கிறார்.

இது வரை, விமானத்தின் கறுப்புப் பெட்டி ஒலிப்பதிவுக் கருவிகளிலிருந்து வரும் ஒலி சமிக்ஞைகளைக் கவனித்து அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கப்பலால் இழுத்துச் செல்லப்பட்ட கருவிகளே பயன்படுத்தப்பட்டுவந்தன.

ஆனால் ஏப்ரல் 8ம் திகதியிலிருந்து இதுவரை புதிய ஒலி சமிக்ஞைகள் ஏதும் கேட்கவில்லை. விமானத்தின் ஒலிப்பதிவு கருவிகள் இயங்கும் பட்டரிகள் தீர்ந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த புளூபின் 21 நீர்மூழ்கி, கடந்த நான்கு முறை கேட்ட ஒலி சமிக்ஞைகள் வரையறுத்த கடல்பரப்புக்குள் தனது தேடல் முயற்சியைத் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த நான்கு ஒலி சமிக்ஞைகளை வல்லுநர்கள் ஆராய்ந்து பார்த்த பின்னர், இந்த விமானத்தின் கறுப்புப்பெட்டி விழுந்திருக்கக்கூடிய கடல் பகுதி வரையறுக்கப்பட்டது, இது ஒரு குறைக்கப்பட்ட, அதே சமயத்தில் தேடக்கூடிய பகுதி என்று ஆங்கஸ் ஹூஸ்டன் கூறினார்.

எனவே அவுஸ்திரேலிய பாதுகாப்புக் கப்பலான ஓஷன் ஷீல்ட் தனது இழுவைக் கருவி மூலம் தேடும் முயற்சியை நிறுத்திக்கொள்ளும் என்றும், இனி தானியங்கி நீர்மூழ்கிக் கருவியான புளூபின் 21 இந்த தேடல் வேலையை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.