கிண்ணத்தை வெல்லுமா இந்திய அணி : இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

282

ind

தெற்காசிய கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதியில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் 10வது தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் அசத்திய இந்தியா, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில், நடப்பு சம்பியன் இந்திய அணி, மாலத்தீவு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய கேப்டன் சுனில் செத்ரி பங்கேற்கவில்லை.

முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணியின் அர்னாப் மாண்டல் 86வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இது இவரது முதலாவது சர்வதேச கோல். இதற்கு மாலத்தீவு அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக (1993, 95, 97, 99, 2005, 08, 09, 11, 13) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தவிர இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று(11) நடக்கவுள்ள இறுதிச்சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2011, 13) மோதுகின்றன.

கடந்த முறை நடந்த இறுதிச்சுற்றில் இந்திய அணி 4-0 என்று ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.