புத்தாண்டில் திருமகள் தரிசனம்!!

553

முக வசீகரத்தையும் பேரெழிலையும் பெற விரும்புவோருக்கு அதை அருளும் திருமகள், ஸௌந்தர்யலட்சுமியாக பூஜிக்கப்படுகிறாள். பதினாறு பேறுகளையும் தந்து மகிழ்ச்சியான இல்லறம் வேண்டுவோர் ஸௌபாக்கிய லட்சுமியை பூஜித்தால் அந்த பாக்கியங்களைப் பெறலாம்.

நமது பெயரும் புகழும் நல்ல முறையில் சமூகத்திற்கு தெரிய அருள் புரியும் லட்சுமி, கீர்த்தி லட்சுமி என வணங்கப்படுகிறாள். மனதிலும் உடலிலும் தைரியத்தைத் தந்து நாம் சந்திக்கும் சோதனைகளிலிருந்து விடுபட வீரலட்சுமி திருவருள் புரிகிறாள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற திருவருட்பாலிக்கும் லட்சுமி, விஜயலட்சுமி. வித்யாரண்யர், விஜயலட்சுமியின் திருவருளைப் பெற்றே செல்வவளம் பெற்று இந்து சமயம் தழைக்க அருளினார். வம்சத்தை வளர்க்கும் மழலைப்பேறு ஓர் அற்புத அனுபவம். எல்லா செல்வங்களையும் விட பெரிய செல்வம் மழலைச் செல்வம். அதை அருள்பவள் சந்தானலட்சுமி.

நாம் சமய சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் புத்திக் கூர்மையோடு நடந்து கொள்ள அருட்பாலிப்பவள் மேதாலட்சுமி. நல்ல கூர்மையான புத்தியை அருள்பவள் இத்தயாபரி. நல்ல கல்வியறிவை அருள்பவள் வித்யாலட்சுமி. ஏடெடுத்து கவி எழுதும் புலவர்களின் நாவிலும் சிந்தையிலும் அமர்ந்தருள்பவள் இந்த லட்சுமி.

பல்வேறு காரணங்களால் மனவேதனையோடு வாழும் மாந்தர்களின் மனவேதனையை அகற்றி அவர்களுக்கு ஆனந்தத்தை அருளும் லட்சுமி, துஷ்டி லட்சுமி. துஷ்டி எனில் ஆனந்தம் என்று பொருள். நமது உடல் சாமுத்ரிகா லட்சணங்களோடு திகழவும் பார்ப்போரைக் கவரும் வண்ணம் புஷ்டியாக இருக்கவும் அருளும் லட்சுமி, புஷ்டிலட்சுமி. நிரந்தரமான சுகம் பேரின்பமே! அந்த ஞானத்தை நமக்கு அருட்பாலிப்பவள் ஞானலட்சுமி.

சன்யாசிகள் கூட இந்த ஞானலட்சுமியின் தயவை வேண்டி துதிக்கின்றனர். உடலிலும் மனதிலும் சக்தி, எதையும் சாதிக்கும் மனவலிமை போன்றவற்றை அருள்பவள், சக்திலட்சுமி. செல்வவளம், கல்விவளம் போன்றவை இருந்தாலும் ஒரு சிலருக்கு ஏதோ ஒரு கவலை அல்லது குழப்பம் மனதை உறுத்தி அமைதியைக் கெடுத்து வரும். அவர்களுக்கு அமைதி கிட்ட அருள்பவளே சாந்திலட்சுமியாக துதிக்கப்படுகிறாள். வீட்டிலும், வெளியிலும் செல்வம், செல்வாக்கோடு வாழ திருவருள்புரியும் லட்சுமி, சாம்ராஜ்ய லட்சுமிதேவி. ஆரோக்கியமே மகாபாக்கியம்.

அனைத்தும் இருந்தும் ஆரோக்கியம் இல்லையெனில் என்ன பயன்? அந்த ஆரோக்கியத்தை அளிப்பவள் ஆரோக்கிய லட்சுமி. சுவர் இருந்தால் சித்திரம் எழுத முடியும் என்பார்கள். நம் உடல் நல்ல முறையில் இயங்க நல்ல உணவு அவசியம். அந்த உணவை அருள்பவள் அன்னலட்சுமி. மாபெரும் சக்ரவர்த்திகளாக திகழ்ந்த மன்னர்கள் அனைவரும் ராஜ்யலட்சுமியை உபாசித்தே அந்த பதவிகளைப் பெற்றனர். குபேரனின் செல்வ வளங்களில் உறைந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு குபேர செல்வத்தை அருளும் லட்சுமி குபேரலட்சுமி என போற்றப்படுகிறாள்.

வீட்டிற்கு வாழ வந்த மருமகள்களை கிரஹலட்சுமி என பெரியோர்கள் போற்றுகின்றனர். முக்தியைத் தந்தருளும் லட்சுமி மோக்ஷலட்சுமி என துதிக்கப்படுகிறாள். இவளே உலகப்பற்று எனும் மாயா பாசங்களை ஞானம் எனும் வாளால் வெட்டி வீழ்த்தி முக்தியை அளிக்க வல்லவள். சகல சௌபாக்கியங்களும் கிட்டி அனைத்து பிரச்னைகளும் தீர்ந்திட திருவருள் புரிபவள் 16 திருக்கரங்களுடன் கூடிய அஷ்ட தசபுஜ மகாலட்சுமியாவாள்.