பாலியல் அடிமைப் பெண் சிலை விவகாரம் : ஜப்பான் தூதர் திரும்ப அழைப்பு!!

390

தென் கொரியாவில் ஜப்பான் துணைத் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ‘பாலியல் அடிமைப் பெண்´ சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான ஜப்பான் தூதர் யாசுமாஸா நாகமினே மீள அழைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது.

பூஸன் துணைத் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பாலியல் அடிமைப் பெண்ணின் சிலை அகற்றப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவத்தினரை மகிழ்விப்பதற்காக கொரிய தீபகற்பம், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 2 லட்சம் பெண்களை பாலியல் அடிமைகளாக ஜப்பான் பயன்படுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

1910 ஆம் ஆண்டிலிருந்து, 1945-ஆம் ஆண்டு வரை கொரிய தீபகற்பம் ஜப்பானின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தபோது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக்கியதற்கு ஜப்பான் பொதுமன்னிப்பு கேட்டது.

மேலும், தற்போது உயிருடன் இருக்கும் முன்னாள் பாலியல் அடிமைப் பெண்களுக்கு 100 கோடி யென் (சுமார் ரூ.58 கோடி) இழப்பீடு வழங்குவதாகவும் ஜப்பான் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விட்டுவிடுவதாக தென் கொரியாவும் ஒப்புக் கொண்டது.

இந்தச் சூழலில், தென் கொரியாவின் பூஸன் நகரில் அமைந்துள்ள ஜப்பான் துணைத் தூதரகம் முன்பு, பாலியல் அடிமைப் பெண்ணின் சிலையை ஜப்பான் எதிர்ப்பு அமைப்பின் நிறுவினர்.

இது 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று கூறி, ஜப்பான் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதிகாரிகள் அந்தச் சிலையை அப்புறப்படுத்தினர்.

எனினும், இரண்டாம் உலகப் போரின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய யாசுகுனி போர் நினைவகத்தில் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கடந்த மாதம் அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, பாலியல் அடிமைப் பெண் சிலையை பூஸன் துணைத் தூதரகம் முன்பு நிறுவ தென் கொரிய அரசு அனுமதி வழங்கியது.