5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் உடல் மீட்பு!!

329

கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது 5000 அடி பள்ளத்தில் விழுந்த பக்தரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை நீலியாம்பட்டி கிராமத்தில் 4500 அடி உயரம் கொண்ட தலைமலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இங்கு வரும் பக்தர்கள் கரடு, முரடான மலைப்பாதையில் ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருமாளை வேண்டிக்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத்தடை அகலும், குடும்பம் செழிப்படையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மலை உச்சியில் உள்ள கோயிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உடையச் சுவரை பிடித்துக் கொண்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதுண்டு.

இந்த நிலையில் நேற்று கிரிவலம் சென்ற இளைஞர் ஒருவர் 5000 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எருமைப்பட்டி காவல் துறையினர் நேற்று முதல் இளைஞரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இருப்பினும் அந்த இளைஞரை மீட்பதில் சிக்கல் நீடித்தது. இரவு நேரமானதாலும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது.

இந்நிலையில், மலையடிவாரத்தில் இளைஞரின் உடல் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்த நபர் பெரியார் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என்றும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால், குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது.