வவுனியாவில் ப.சத்தியலிங்கத்தைச் சந்தித்த அமைச்சர் செந்தில் தொண்டமான்!!

314

 
வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாண சபை உறுப்பினருமாகிய ப.சத்தியலிங்கத்தை ஊவா மாகாண சபையின் அமைச்சர் செந்தில் தொண்டமான் நேற்றிரவு (14.12.2017) வவுனியாவில் சந்தித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் எதிர்க்கட்சி தலைவரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது வவுனியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த ப.சத்தியலிங்கம்,

ஏற்கனவே இது தொடர்பில் தாங்கள் கவனமெடுத்திருப்பதாகவும் பிரதேச சபைகளில் மலையக சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் மலையக தமிழர் என்ற வர்க்க வேறுபாடுகளின்றி வடக்கில் வாழும் தமிழர்கள் என்ற ரீதியிலேயே அனைவரும் ஒற்றுமையுடன் வாழுவதாகவும்,
தமிழர்களுக்கான இன விடுதலை உரிமைப்போராட்டத்தில் மலையக தமிழ் மக்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியததெனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் செந்தில் தொண்டமான், சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் தலைமைகளுடன் இணைந்து பணியாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களாகிய வடகிழக்கு தமிழ் மக்களும் மலைய மக்களும் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதனூடாகவே அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியுமெனவும் தெரிவித்தார்.