ஆபத்தான பாதையை மலேசிய விமானம் தேர்ந்தெடுத்தது ஏன்?

252

Malaysia

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.

உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் 280 பயணிகள் 15 சிப்பந்திகள் என அந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர்.

ஆசிய கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாக கருதப்படுகிறது.

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டு வீழ்த்தி இருந்ததால், இந்த பாதையை சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே அவ்வழியாக பறக்கும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆபத்து நிறைந்த பாதை என்பதை அறிந்திருந்தும் 295 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவ்வழியாக சென்றது ஏன் என இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துறை பிரபல பேராசிரியர்களில் ஒருவரான நார்மன் ஷேங்க்ஸ்..

உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு மேலே உள்ள வான் எல்லையில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என்று தான் அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து விமான நிறுவனங்களும் எரிபொருள் மற்றும் நேரத்தை சிக்கனப்படுத்தும் பாதைகளை தேர்ந்தெடுப்பதையே விரும்புகின்றன. கிழக்கு உக்ரைனின் வான் வெளியின் மீது பறப்பது ஆபத்து நிறைந்தது. அவ்வழியே பறக்க வேண்டாம் என்று பிரத்யேகமாக எச்சரித்திருந்தால் அவ்வழியே பறப்பதை விமானங்கள் தவிர்த்திருக்கும்.

மேலும் நேற்று அப்பகுதி வழியாக பறந்தது இராணுவ விமானம் அல்ல, பயணிகள் விமானம் என்பதை அறிந்த பின்னரே அதை ஏவுகணையின் மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளனர்.

30 ஆயிரம் அடிகளுக்கு உட்பட்ட உயரத்தில் அந்த விமானம் பறந்த நிலையில் அதன் உருவ அமைப்பை வைத்தே, அது இராணுவ விமானம் அல்ல, பயணிகள் விமானம் தான் என்பதை கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கக் கூடும். பயணிகள் விமானம் என்று தெரிந்த பின்னரும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.