வவுனியாவில் காணாமற்போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

488

சர்வதேச காணாமல் போனோர் தினம், இன்று சனிக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வட மாகாணத்தை சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் மற்றும் காணாமல் போனோரின் இணையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், காணாமல் போனோரின் உறவினர்களின் உறவுப்பகிர்வு நிகழ்வும், துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன். வினோ நோகதாரலிங்கம், எம்.சுமந்திரன், எஸ்.சரவணபவன், வட மாகாணசபை அமைச்சர்களான ப. சத்தியலிங்கம், பா.டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, எம். தியாகராஜா, து.ரவிகரன், சி.சிவமோகன், அனந்தி சசிதரன், சிராய்வா, சிவாஜிலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இணைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ உட்பட பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

காணாமல் போனோர் பற்றிய விழிப்புணர்வொன்றை ஏற்படுத்தல் மற்றும் அவர்கள் மீண்டுவருவதற்கான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமுகமாக, சர்வதேச காணாமல் போனோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் இலங்கையில் கடந்த 3 தசாப்த கால யுத்த வரலாற்றில் காணாமல் போனோரை நினைவுகூருமுகமாக பல உணர்வுபூர்வ நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக அப்பாவி மக்களை கடத்துதல் மற்றும் கொலைசெய்வதை, ஐ.நா. இன்றைய நாளில் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிகழ்வில் மேற்கொண்ட தீர்மானங்கள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதியின் காணாமற் போனோரை கண்டுபிடிக்கும் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபர் பணிமனைக்கு அமைதி ஊர்வலமாக செல்ல முற்பட்டபொழுது நீதிமன்ற வளாகத்திற்கு முன்னாள் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டது.

பின்னர் மக்கள் அனைவரும் அந்த வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து வவுனியா நகரை நோக்கி ஊர்வலமாக பதாதைகளை ஏ ந்திய வண்ணம் மணிக்கூடு கோபுரத்திற்கு முன்னால் மக்கள் கூடி நின்றனர். தொடர்ந்து தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்று பின்னர் போராட்டம் நிறைவிற்கு வந்தது.

-நன்றி பூர்வீகம்-

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14