முடிவுக்கு வருகிறது ஏர் ஏசியா விமான பாகங்களின் தேடல்!!

299

Flight

இந்தோனேசியா அருகேவுள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து கடந்த மாதம் 28ம் திகதி, 162 பேருடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்துள்ளது. இதையடுத்து கடலில் விழுந்த விமான பாகங்கள், பயணிகளின் உடல்களை தேடும் பணி தொடங்கியது.

மீட்பு பணியில் ஈடுபட்ட இந்தோனேசிய ராணுவம் விமானத்தின் கருப்பு பெட்டிகள், வால் பகுதி உள்ளிட்ட பல பாகங்களை மீட்டுள்ளன.

விமானத்தில் பயணம் செய்த 162 பேரில் 70 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. இந் நிலையில் ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பயணிகளின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட 81 கடற்படை வீரர்களில் பலர் கடலுக்கு அடியில் சென்று பாகங்கள் மற்றும் உடல்களை தேடியதால் 17 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஜகர்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.