சந்திரனில் நிலநடுக்கம்!!

384

Moon

நாம் வாழுகிற பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன. அவை நகர்கிறபோது நில நடுக்கம் ஏற்படுகிறது.

பூமியின் துணை கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல அடுக்குகள் இருக்கின்றன என்றும் அந்த அடுக்குகள் நகர்கிறபோது, அங்கும் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

சந்திரயான் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்களை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் நிலவியல் தொலை உணர்வு பேராசிரியரும், விஞ்ஞானியுமான சவுமித்ரா முகர்ஜியும், அவரது மாணவி பிரியதர்சினி சிங்கும் ஆய்வு செய்து வந்தனர்.

குறிப்பாக சந்திரயான் விண்கலத்தில், பொருத்தப்பட்டுள்ள குறுகிய கோண கேமராவும், சந்திர வேவு கல கேமராவும் சந்திரனின் மேற்பரப்பினை படம் பிடித்து அனுப்பி உள்ளன. இந்த படத்தைத்தான் அவர்கள் ஆய்வு செய்து வந்தார்கள்.

இது தொடர்பாக பேராசிரியர் சவுமித்ரா முகர்ஜி கூறியதாவது..

சந்திரனின் தென்துருவத்தில் பெறப்பட்ட தகவல்கள், சந்திரனின் மேற்பரப்பில் அடுக்குகள் நகர்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. அதுவும் இந்த அடுக்குகளின் நகர்தல், பூமியில் புவித்தட்டுகளின் நகர்தல் போலவே அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் உள்ள அடுக்குகளில் இரண்டாவது அடுக்கு எரிந்துகொண்டிருப்பதால், டெக்டானிக் பிளேட்டுகள் நகர்கின்றன.

இரண்டாவது அடுக்கு எரிந்து கொண்டிருப்பதால், அங்குள்ள பாறைகள், கனிமங்கள், தாதுக்கள் உருகி பாகு போன்ற திரவ நிலையில் உள்ளன.

இதேபோன்ற நிலையை சந்திரனின் மேற்பரப்பிலும் காண முடிகிறது.

எனவே தான், பூமியின் வடிவமைப்பில்தான் சந்திரனும் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாகிறது. அந்த வகையில் பூமியில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும், சந்திரனில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும் ஒப்பிட்டு ஆராய முடியும்.

தற்போது நில நடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க வழி இல்லை. எனவே எதிர்காலத்தில் சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகிற டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்தல், நில நடுக்கம் ஆகியவற்றை பூமியில் ஏற்படுகிற நில நடுக்கத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், அது பூமியில் நில நடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதற்கு ஒரு படியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.