90,000 மக்கள் கலந்து கொண்ட கனடாவின் முதற் தமிழ்த் திருவிழா!!

822

AGNI audienceஉலகிலே முதன் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியே நடாத்தப்பட்ட தமிழ்த் திருவிழா கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கனடியத் தமிழர் பேரவையினால்​ ​நடாத்தப்பட்ட இந்த மிகப்பெரும் தமிழ்த் திரு விழாவில் 90 000 மக்கள் கலந்து சிறப்பித்து விழாவை ஒரு வரலாறு படைத்த விழாவாக்கினர்.

சனிக்கிழமை பிற்பகல் கனடாவின் புகழ் பூத்த பல நடன ஆசிரியர்கள் தயாரித்து நெறிப்படுத்திய தமிழர் மரபுக் கலைகளான பரதநாட்டியம், கும்மியாட்டம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம் போன்றவைகளுடன் நாதசுரமும் தவிலும் முழங்க நிகழ்ச்சிகள் தொடங்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

1974ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டிலே பேச்சாளராகக் கலந்து கொண்டிருந்த கனடிய ஆங்கில பெண்மணியான பிரண்டா பெக்கினால் தயாரித்து வழங்கப்பட்ட தமிழர்களின் மரபுக் கூத்துக்களில் ஒன்றான பொன்னி வளவர் கூத்துப் போன்ற நிகழ்வுகளும் மற்றும் வில்லுப்பாட்டு வேறு பல தமிழ் மரபுக் கலை கலாச்சார நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்றன.

ரொறன்ரோ மாநாகரின் ஒரு முக்கிய வீதியான மோணிங்சைட் பெருந்தெருவிலே அமைக்கப்பட்டிருந்த இரு அரங்குகளில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன்​ இந்நிகழச்சிகள் இடம்பெற்றது. இந்தத் தமிழ்த் திருவிழா நடத்துவதற்கு ஏதுவாக ரொறன்ரோ மாநகராட்சி நகரின் முக்கிய தெருக்களில் ஒன்றான இந்தத் தெருவை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மூட அனுமதி அளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுப்பத்தைந்திற்கும் மேற்பட்ட சாவடிகள் இவ்விழாவில்​ ​அமைக்கப்பட்டிருந்தன. உணவுச் சாவடிகளோடு பல குமுக அமைப்புகள், அரசியற் கட்சிகள், வணிக நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றன தங்கள் சாவடிகளை இங்கு அமைத்திருந்தனர். இரண்டு நாட்களிலும் அலை அலையாய் வந்த மக்கள் கூட்டம் இந்தச் சாவடிகளை மொய்த்த வண்ணம் இருந்தனர்.

உணவுச் சாவடிகள், குளிர்களி ஊர்திகள் போன்றவற்றில் வரிசையாக நின்று மக்கள் உண்டு மகிழ்ந்ததையும், ஏனைய சாவடிகளிற் பொருட்கள் வாங்க முண்டியடித்ததையும் கண்ட பலர் இது தமிழ்நாட்டின் பெரிய திருவிழாக்களையும், ஈழத்தின் புகழ் பூத்த திருவிழாக்களையும் தங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதாகச் தெரிவித்தனர்.

கனடாவின் முக்கிய அரசியற் பிரமுகர்களான மத்திய அமைச்சர்கள் யேசன் கெனி, கிறிசு அலெக்சாண்டர், லிபரல் கட்சித் தலைவர் யசுரின் உஷரூடோ, புதிய சனநாயக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் கிரெக் இசுகொட்​, ​ஒன்டாரியோ மாகாண அமைச்சர்கள் மிட்சி ஹன்டர், தீபிகா டாமரல்ல, ​ஒன்ட்டாரியோ மாகாண புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆண்ட்ரியா ஹோர்வத் ஆகியோருடன் ரொறன்ரோ மாநகரத் துணை முதல்வர் டென்சில் மினன்வொங் உட்பட ஏராளமான அரசியற் பிரமுகர்களும் தமிழ் அரசியல் பிரமுகர்களும் இந்தியாவின் கனடாவுக்கான துணைத் தூதர் அகிலேசு மிசுராவும் நிகழ்வுகளிற் கலந்து சிறப்பித்தனர்.

கனடாவின் பிரபலம் வாய்ந்த இசைக்குழுக்களான அக்னி இசைக்குழு சனிக்கிழமை பிற்பகலிலும் பாரதி கலைக் கோவில் ஞாயிற்று கிழமை பிற்பகலிலும் சுப்பர் சன்சும் குழுவினர் ஞாயிற்று கிழமை பிற்பகலிலும் மெல்லிசை நிகழ்வுகளை வழங்கித் தமிழ்த் தெரு விழாவுக்கு மேலும் மெருகூட்டினர்.

இத் தமிழ்த் தெரு விழாவின் முக்கிய புரவலரான லிபாரா நிறுவனத்தினர் விழாவினுடைய இணைப் புரவலரான ஐடியல் டெவலப்மென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியிலிருந்து சனிக்கிழமை இரவின் இறுதி நிகழ்வாக நடத்திய வாண வேடிக்கை சனிக்கிழமை நிகழ்வுக்கு முத்தாப்பு வைத்தது.

கனடியத் தமிழரின் முதற்தெரு விழாவான இந்த விழாவினை ஒட்டிய செய்திகளைக் கனடாவின் பிரபலமான பல மைய ஊடகங்கள் முதன்மைப் படுத்திச் செய்திகளை வெளியிட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விழாவின் ஏற்பாட்டாளர்களான கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர்​ ​டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் இந்த மிகப்பெரும் விழாவின் சிறப்பான வெற்றி கனடியத் தமிழர்களின் ஒட்டுமொத்த வெற்றி என்றும் இது கனடியத் தமிழர்களின் வரலாற்றிலே இன்னொரு மைல் கல் என்றும் தெரிவித்தார்.