ஆப்கான் மற்றும் பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தில் 275 பேர் பலி!!

762

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ளன. 7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்துகுஷ் மலைப் பிராந்தியத்திலுள்ள ஃபைசலாபாத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வின் தாக்கம் பாகிஸ்தான், இந்தியாவின் வடபிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது.

பின்தங்கிய பகுதிகளே நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய மலைப்பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் மிகவும் ஆழமான பகுதியில் ஏற்பட்டதால் அதன் தாக்கம் மிகக் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் வட பிராந்தியத்திலேயே அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை 214 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துல்ஹுவா மாகாணத்தில் மாத்திரம் 154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்கானின் டக்ஹார் மாகாணத்திலுள்ள பெண்கள் பாடசாலையின் வகுப்பறையில் இருந்து வெளியேற்ற முற்ப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் 12 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பயணத்தை இரத்துச்செய்து நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானின் மூன்று மாகாணங்களில் நிலநடுக்கம் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசாங்கம் கோரியுள்ளதாக ஆப்கான் தலைமை நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தை அடுத்து லாகூரில் தொலைத் தொடர்புகள் தூண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்திய தலைநகர் புதுடில்லியில் வீதிகளுக்கு மக்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏற்பட்டிருக்குமாயின் அதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி பணித்துள்ளார்.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தலைநகரங்களிலுள்ள கட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 75 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 9000 பேர் உயிரிழந்ததுடன், 9 இலட்சம் பேரின் வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

11 12 13