
இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் போதேல்லாம் குரல் கொடுக்க யாருமற்றிருக்கையில் தம்மை ஆகுதியாக்கியும் போராட்டங்களை நடத்தியும் இலங்கையின் வடபால் நடந்த கோரத்திற்கு முகவரி தேடிக்கொடுத்த பலர் இன்று இயற்கையின் சீற்றத்தால் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை வாழ் தமிழர்களாகிய நாம் அம்மக்களுக்கு உதவ வேண்டியது தலையாய கடமையாக காணப்படுவதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு உதவுவதற்கு பலரும் முன்வந்துள்ள நிலையில அதனை பொறுப்படன் செயற்படுத்த வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.
அந்தவகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுச் சேர்க்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன கோரப்படுகின்றன.
அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள், வர்த்தகர் சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம், பொது அமைப்புகள், வர்த்தகர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதுடன், பொருட்களை வவுனியா குருமண்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





