விமானம் கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது!!

250

 
எகிப்து விமானசேவைக்கு சொந்தமான A320 என்ற விமானம் அலெக்சான்ரியாவில் இருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்தபோது கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

கெய்ரோ சென்ற எகிப்து ஏர் பயணிகள் விமானத்தை இப்ராஹிம் சமஹா என்ற சந்தேக நபர் கடத்திச் சென்று சைப்பிரஸில் தரையிறக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சைப்ரஸில் அரசியல் தஞ்சம் கேட்டு விமானத்தை இப்ராஹிம் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான கடத்தலில் ஈடுபட்ட இப்ராஹிமிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரையும் இப்ராஹிம் கேட்டுள்ளான்.

மேலும் தமது கடிதத்தை முன்னாள் மனைவியிடம் கொடுக்குமாறும் விமானத்தை கடத்தியநபரான இப்ராஹிம் கோரியுள்ளார்.

அலெக்சாண்டிரியாவில் இருந்து 80 பயணிகளுடன் விமானம் கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டது. விமானத்திற்குள் இருந்த இப்ராகிம் சமஹா, விமானியை மிரட்டி பயணிகள் விமானத்தை சைப்ரஸ் நாட்டின் லர்நாகா விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

காலை 6.28 மணிக்கு அலெக்சாண்டிரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் 7.45 மணிக்கு கெய்ரோவில் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால் விமானம் கடத்தப்பட்டு சைப்பிரஸில் தரையிறக்கப்பட்டநிலையில், விமானத்தை கடத்திய இப்ராஹிம் உடலில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் வெளியாகின.

கடத்தப்பட்ட விமானத்திலிருந்து முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சில வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை தவிர அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை. விமானம் கடத்தப்பட்டதால் சைப்ரஸ் நாட்டின் லார்நாகா விமான நிலையம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3