வினோதினி மீது ஆசிட் வீச்சு – சுரேஷுக்கு ஆயுள் தண்டனை..!

636

vinodiniமிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட காரைக்கால் அமில வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினார்.

படுகாயமடைந்த வினோதினி பின்னர் பிப்ரவரி 12 ஆம் நாளன்று சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.

அவர்கள் காதலித்ததாகவும், பல உதவிகள் தான் செய்ததாகவும், ஆனால் பொறியாளரான பிறகு தன்னை உதாசீனப்படுத்தினார் வினோதினி, திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார், எனவே ஆத்திரப்பட்டு ஆசிட் வீசியதாக சுரேஷ் கூறினார்.

சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. சம்பவத்திற்கு மறுநாளே சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் நிறைவடைந்து, இன்று கூடுதல் அமர்வு நீதிபதி வைத்தியநாதன் வினோதினி கொலைக்காக சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும், வினோதினி, மற்றும் உடனிருந்த இருவரைக் காயப்படுத்தியதற்காக 4 ஆண்டு கால சிறை தண்டனையையும் விதித்தார்.

சுரேஷுக்கு மரண தண்டனை கோரியிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.